
வீட்டுச் சாவியை எங்காவது மறந்து வைத்து விட்டீர்களா… உங்களுடைய செல்லப்பிராணி எங்கேயாவது தப்பி ஓடி விட்டதா… சமூக விரோதிகள் அல்லது தீவிரவாதிகள் 10 அடி தடிமன் கொண்ட கான்கிரீட் பங்கருக்குள் பதுங்கி இருக்கிறார்களா…? பிரச்சனை இல்லை, தொழில்நுட்பத்தின் உதவியோடு இவை அனைத்தையும் ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு சில மீட்டர் துல்லியத்தில் கண்டுபிடித்து விடலாம்.
அப்படியும் கிடைக்கவில்லையா, சமூக வலைதளத்தில் பதிவிட்டு இதை காணவில்லை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் கொடுக்கப்படும் மிக்க நன்றி என ஒரு பதிவை போட்டால் கூட ஒரு சில வாரங்களில் உங்களுடைய வீட்டுச் சாவியோ, உங்கள் செல்ல பிராணியையோ கண்டுபிடித்து விடலாம். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் குறித்த விவரங்கள் சொல்வதற்கு தக்க சன்மானத்தையும் கொடுத்துவிடலாம். இப்படித்தான் இன்றைய தொழில்நுட்ப யுகம் கழிந்து கொண்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டில் மனித வளர்ச்சியின் உச்சமாகக் கருதப்படும் செயற்கைக் கோள், தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் கேள்விக்கு கேலிக்கும் உட்படுத்தியது ஒரு விமானம். அந்த விமானத்தின் பெயர் MH 370.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH 370, அன்று தோராயமாக 12.40 மணியளவில் (மலேசிய நேரப்படி) மலேசியாவில் தன் பயணத்தைத் தொடங்கியது. போயிங் 777 - 200ER ரக விமானத்தில், சுமார் 227 பயணிகளும் 12 விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்களும் (விமானிகள் உட்பட) இருந்தனர். மொத்தம் 239 பேர். மலேசியாவிலிருந்து புறப்பட்ட MH 370 திட்டமிட்டபடி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்குச் செல்ல வேண்டும்.
ஆனால் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் புறப்பட்ட MH 370, பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள், அதாவது மலேசிய நேரப்படி காலை 1:20 மணிவாக்கில் கடைசியாக விமான போக்குவரத்து அதிகாரிகளோடு தொடர்பு கொண்டது. அப்போது MH 370 தென் சீனக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தது.
1:22 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து மாயமானது. 2:22 மணியளவில், அந்தமான் கடலுக்கு மேல், பெனாங் தீவில் இருந்து சுமார் 370 கிமீ தொலைவில் MH 370 பறந்து கொண்டிருந்த போது ராணுவ ரேடாரில் இருந்தும் மாயமானது.
அதன் பிறகு அரசு எந்திரங்கள் எவ்வளவோ முயன்றும், MH 370 விமானத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தில் பயணித்த 239 பேரும் உயிரிழந்ததாகக் கருதப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்துக்கு என்ன ஆனது? விமானத்தில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள்? தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டிலும் ஒரு விமானம் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்?
MH 370 விமானிகளில் ஒருவர் சஹாரி அஹ்மத் ஷா. 53 வயதான இவர், தேந்த, அனுபவமுள்ள மலேசிய ஏர்லைன்ஸில் பலராலும் மதிக்கப்படும் மூத்த விமானி. அவரோடு 27 வயதான ஃபாரிக் ஹமீத் துணை விமானியாக இருந்தார். இவர்களோடு 10 விமான உதவியாளர்களும் MH 370-ல் பணியில் இருந்தனர்.
விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். அவர்களோடு, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, இரான், உக்ரைன், கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, தைவான் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் இருந்தனர்.
மலேசியாவைத் தாண்டி வியட்னாம் வான் எல்லையைத் தொட்ட சில நொடிகளுக்குள் MH 370 விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. எத்தனையோ முறை MH 370 உடன் தொடர்புகொள்ள முயற்சித்தநர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
சர்வதேச சமூகங்களும், அரசாங்கங்களும் பதறிவிட்டனர். எப்போதும் விமானக் கட்டுப்பாட்டு அறையினரோடு தொடர்பில் இருக்க வேண்டிய விமானம், எப்படி தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது, அதை விட முக்கியமாக எப்படி ரேடாரில் இருந்து மாயமானது என்கிற கேள்விகளுக்கு அரசாங்கங்கள் விடை தேடத் தொடங்கினர். மறுபக்கம், இஷ்டத்துக்கு கதைகளும் புரளிகளும் வழிந்தோடத்தொடங்கின. மணி நேரங்கள், மாதங்களாயின. ஆண்டுகள் பல உருண்டோடின, ஆனால் விமானம் குறித்து எந்த வலுவான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
வியட்னாம் வான் எல்லையைத் தொட்ட MH 370, திடீரென இடது பக்கம் திரும்பி, தென் மேற்கு திசையில், மலேய தீபகற்பத்தின் மேல் பறக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அந்தமான் கடல் மீது பறந்து, ரேடாரில் இருந்து மறைந்து போனது. இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒரு ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரேடாரில் இருந்து மாயமான MH 370, அடுத்த 6 மணி நேரத்துக்கு அவ்வப்போது Inmarsat செயற்கைக் கோளோடு தொடர்பு கொண்டது. எலெக்ட்ரானிக் பிளிப்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு மூலம் கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, தெற்கு நோக்கிப் பறந்த MH 370 அந்தமான் கடலைத் தொட்ட பிறகு, பல மணி நேரம் நேராக விமானத்தில் எரிபொருள் தீரும் வரை பறந்து, தெற்கு இந்தியப் பெருங்கடலில் மூழ்கி இருக்கலாம் என்று நெட்ஃப்ளிக்ஸ் டாகுசீரிசில் வரும் பல நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா & அண்டார்டிகாவுக்கு இடையில் மூழ்கி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இதை எல்லாம் விட முக்கியமாக, எரிபொருள் தீர்ந்து விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே, விமானம் Depressurized செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்தவித அடிப்படைக் காரணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. அதுவே விமானத்தில் இருந்த அனைவரின் உயிரையும் மாய்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வாதத்தை, MH 370 விமானத்தின் தேடுதல் பணியில் நேரடியாக ஈடுபட்ட பலரும் குறைந்தபட்சமாகவாவது ஏற்றுக் கொள்கிறார்கள் என "தி கார்டியன்" பத்திரிகை வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் MH 370 தொடர்பான டாகு சீரிஸின் முதல் எபிசோடான "தி பைலட்" என்கிற அத்தியாயத்தில், இதே வாதங்களை முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
விமானி சஹாரி அஹ்மத் ஷா பெரிய எண்ணிக்கையில் மக்களைக் கொலை செய்வதற்கான அல்லது தற்கொலை செய்து கொள்வதர்கான முயற்சி (mass murder-suicide plot) என்கிற வாதத்தை முன் வைக்கிறது. அவர் வீட்டில் இருந்த விமான சிமுலேட்டரில், MH 370 பறந்த பாதை போலவே வித்தியாசமான ஒரு பயணப் பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
MH 370 தொடர்பான அடுத்தடுத்த அத்தியாயங்கள், வேறு சில கோட்பாடுகளை முன் வைக்கின்றன, முரண்பாடான விஷயங்களையும் விளக்குகின்றன. அதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களில் பலதும் முழுமையானவை அல்ல என்றும், தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும், புனையப்பட்டதாகவும் கருதப்படுகிறது அல்லது கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust