உக்ரைன்: பக்முத் பகுதியை கைப்பற்றிவிட்டதா ரஷ்யா? அதிபர் செலென்ஸ்கி உருக்கம்
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடங்கியது. இப்போது ஓராண்டு நிறைவடைந்த பிறகும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மாறாக ஒரு சில இடங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான ஆயுதத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது.
அப்படி, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உள்ள பக்முத் (Bakhmut) பகுதியில் மிகக் கடுமையான போர் நடந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கியே கூறியதாக பல்வேறு சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதி ரஷ்யா மற்றும் அதன் பிரிவினைவாத கூட்டணி வசம் இருப்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
ரஷ்ய துருப்புகள் கடந்த ஆறு மாத காலமாக பக்முத்தைக் கைப்பற்ற கடும் போரை நடத்திக் கொண்டிருப்பதாக பிபிசி வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

தொழில் வளமிக்க இந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் மேற்கொள்ளும் முயற்சி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது, சொல்லப் போனால் மெல்ல உக்ரைன் தரப்பிடமிருந்து அப்பகுதி கைநழுவிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரத்தின் அனைத்து சாலைகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட குழுவின் தலைவர் டெனிஸ் புஷிலின் (Denis Pushilin) கூறியுள்ளதாக சில சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பக்முத் பகுதியில் சூழல் மிகவும் தீவிரமடைந்து வருவதாக உக்ரைன் தரப்பிலான படையை வழிநடத்தி வரும் கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் ரஷ்ய தரப்பு, தன்னுடைய வாக்னர் தாக்குதல் படையை களமிறக்கியுள்ளதாகவும், அவர்கள் பக்முத் நகரத்தில் உக்ரைன் தரப்பு அமைத்திருக்கும் பாதுகாப்பு அரண்களையும், துருப்புகளையும் உடைத்தெறிந்து நகரத்தை முற்றுகையிட முயல்வதாகவும் கூறியுள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி.

ரஷ்யாவின் கடும் தாக்குதலால், பக்மூத் நகரத்தை பாதுகாப்பதும், முன்னேறி புதிய நிலப்பரப்புகளைப் பிடிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியே கூறியுள்ளார்.
அதோடு, பக்மூத் பகுதியை ரஷ்ய தரப்பு ஆக்கிரமிக்காமல் இருக்க, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாக்கும் ஒவ்வொரு வீரருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார் செலென்ஸ்கி.
ரஷ்ய தீவிரவாதத் தாக்குதலிலிருந்து உக்ரைனைப் பாதுகாக்க, நாட்டின் ஒட்டுமொத்த நிலபரப்பிற்கும் அதிநவீன போர் விமானங்கள் அனுப்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்திருக்கிறார் செலென்ஸ்கி.
இந்த இக்கட்டான சூழலில் தான், அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஜெனெட் யெலன் திங்கட்கிழமை உக்ரைன் நாட்டின் கைவ் நகரத்துக்குச் சென்றார். உக்ரைன் நாட்டுக்கு 1.25 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார & பட்ஜெட் உதவித் தொகை வழங்கப்பட்டதையும் தெரிவித்தார்.
உக்ரைன் இந்தப் போரில் வெற்றி காணும் வரை, அமெரிக்கா, உக்ரைன் தரப்புக்கு ஆதரவளிக்கும் என்கிற செய்தியை மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜெனெட் யெலன்.
கடந்த வாரம் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டுக்கு வந்த போது, அமெரிக்காவின் ஆதரவு உக்ரைனுக்கு இருக்கும் என்பதை வலியுறுத்தியது இங்கு நினைவுகூரத்தக்கது.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, காலப்போக்கில் மெல்ல ரஷ்யப் பொருளாதாரம் பலவீனமடையும் என ஜெனட் யெலன் சிஎன்என் ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டியில் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதை எல்லாம் விட முக்கியமாக, உக்ரைனின் தாக்குதலில், ரஷ்யாவின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விநியோகித்தால் அதற்கு சீனா கடுமையான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கும் தொனியில் ஜெனட் யெலன் கூறியது சர்வதேச அரங்கில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த வாரம், சீனா, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை விநியோகிக்க ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி ஃப்ளிங்கன் கூறினார். அதை சீன தரப்பு திட்டவட்டமாக மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம், சீனாவின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி வாங் யீ மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இடையில் மாஸ்கோவில் கடந்த வாரம் பேச்சு வார்த்தை நடந்ததாகவும் செய்திகள் வெளியாயின.

அதே போல, விளாதிமிர் புதினின் கூட்டாளியான பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ, செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்தப் பயணத்தில், அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அலெக்சாண்டர் லுகஷென்கோ சீன அதிபரைச் சந்தித்தால் ரஷ்ய தரப்புக்கு உதவுமாறு கோரிக்கைகள் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போர் முடிய வேண்டும் என பலரும் எதிர்பார்க்கும் நேரத்தில், உக்ரைன் - அமெரிக்கா, ரஷ்யா - சீனா என அணியாகப் பிரிந்து, போதிய உதவிகளோடு போர் தொடர்ந்தால், இந்தப் போர் மேலும் தீவிரமடையமே ஒழிய, முடிவுக்கு வராது என பலரும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust