
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய இந்தியர் ஒருவர் உதவினார். அதோடு, அவருக்கு போலி அடையாள அட்டைகளையும், தங்குவதற்கு இடமும் கொடுத்து உதவினார்.
இந்த குற்றத்துக்காக அந்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
இதில் என்ன செய்தி இருக்கிறது… இப்படி சட்ட விரோதமாக ஒருவரை (அதுவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை) இந்தியாவுக்குள் யார் அழைத்து வந்தாலும் அது குற்றம் தானே..? என்று கேட்கிறீர்களா...
பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தது ஒரு பெண். அந்தப் பெண்ணுக்கு உதவியது, இந்தியாவைச் சேர்ந்த அப்பெண்ணின் கணவர் தான்.
இந்தியா பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்களுக்கு மத்தியில் காதல் மலர்ந்தது எப்படி? திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பிறகும் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தது ஏன்?
கடந்த 2020ஆம் ஆண்டு உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அப்போது பலரது பொழுதுபோக்கு மொபைல் ஃபோன்கள், அதிலிருக்கும் ஆன்லைன் விளையாட்டுகளாக தான் இருந்தன.
பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த மாணவி இக்ரா ஜிவானி (19 வயது) என்பவரும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் (21 வயது) என்பவரும் ஆன்லைனில் லூடோ விளையாடினர்.
முலாயாம் பெங்களூரு நகரத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆன்லைன் விளையாட்டு, நட்பாகி, காதலாகிக் கசிந்துருகத் தொடங்கியது.
இருவரும் தாங்கள் இந்தியா & பாகிஸ்தானில் இருப்பதும், ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வதெல்லாம் அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதையும் உணர்ந்தே இருந்தனர்.
இருப்பினும் இருவருக்கும் இடையிலான காதல் குறையவில்லை, மாறாக வலுவடைந்தது. இக்ரா ஜிவானியின் குடும்பத்தினர் திருமணம் தொடர்பாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.
இதுநாள் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்கு இடையில் 3 முறை முழு போரே மூண்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பஞ்சாயத்து வெறுமனே அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மட்டும் தீரக் கூடிய விஷயமில்லை.
இந்தியா - பாக் கிரிக்கெட் போட்டி என்றால், அது எந்த அளவுக்கு அரசியலாக்கப்படும் என்பதை, போட்டிக்குப் பிறகான சமூக வலைதளப் பதிவுகளைக் கண்டால் தெரியும்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை குரூப் ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடித் தோற்றது.
துபாய் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மத் ஷமி 3.5 ஓவர்களை வீசி 43 ரன்களைக் கொடுத்தார்.
அப்போது சிலர், மொஹம்மத் ஷமியின் மதத்தைக் குறிப்பிட்டு மிகக் கொச்சையாக விமர்சித்தனர். அப்போது ஷமி தரப்பு நியாயங்களையும், விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமான ஒரு விஷயம் தான் என்று சச்சின் டெண்டுல்கர், இர்ஃபான் பதான், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராகுல் காந்தி, மொஹம்மத் அசாருதீன்… என பல்வேறு இந்தியப் பிரபலங்கள் தங்கள் ஆதரவுக் கரம் நீட்டிய பிறகே அந்த சர்ச்சை ஓய்ந்தது.
சரி, மீண்டும் இக்ரானி - முலாயாம் சிங் காதலுக்கு வருவோம். இருநாடுகளுக்கு இடையிலான உறவுமுறையை பற்றித் தெரிந்து இருந்தும், இருவரும் சேர்ந்து வாழத் தீர்மானித்தனர்.
சட்டப்படி திருமணம் எல்லாம் செய்து கொண்டால் கூட, இருநாட்டு தரப்பிலும் விசாக்களை வாங்குவது, அடிக்கடி வந்து போவது எல்லாம் அத்தனை எளிதான காரியமாக இல்லை என்பதெல்லாம் அவர்கள் ஆலோசித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
எனவே கடந்த செப்டம்பர் மாத வாக்கில், முலாயாம் சிங் யாதவ், இக்ரா ஜிவானியை, துபாய் வழியாக நேபால் நாட்டுக்கு வருமாறு கூறி, அங்கேயே ஒரு கோயிலில் வைத்து இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின், இருவரும் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வந்து வாழத் தொடங்கியுள்ளனர்.
இங்குதான் சட்ட ரீதியிலான சிக்கல் தொடங்குகிறது. இக்ரா ஜிவானியிடம் இந்தியாவிலேயே தங்க உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.
எனவே எதார்த்தத்தில் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, முலாயாம் சிங், தன் மனைவி இக்ரா ஜிவானி பெயரில் ஒரு ஆதார் கார்டை போலியாக தயாரித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
முலாயாம் சிங் யாதவ், வழக்கம் போல வேலைக்குச் செல்வார், இக்ரா ஜிவானி பெங்களூருவில் கணவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பார்.
இக்ரா ஜிவாணி முலாயாம் சிங் யாதவைத் திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்த பிறகும், தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டில் உள்ள தன் தாயார் உடன் பேசி வந்தார்.
அதுவும் வாட்ஸாப் கால் வழியாக பேசியது கர்நாடகா காவல்துறைக்கு தெரிய வந்து சந்தேகத்தைக் கிளப்பியது.
கடந்த சில வாரங்களில் மட்டும் (2023 பிப்ரவரி மாதத்தில்), பிரதமர் கலந்து கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏரோ இந்தியா ஏர் ஷோ, ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாட்டுக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் பெங்களூரு நகரத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தன.
எனவே, பாதுகாப்பு சோதனைகள் & கெடுபிடிகள் அதிகரித்த போது இக்ராவின் தொலைபேசி அழைப்பும் காவல்துறையை அதிவிரைவாகச் செயல்பட வைத்தது.
இப்படி காவல்துறையினர் விசாரித்து, நூல் பிடித்துப் போன போதுதான், இக்ரா ஜிவானி எந்தவித முறையான ஆவணங்கள் கையில் இல்லாமல் இந்தியாவில் வாழ்ந்து வருவது கர்நாடக காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, Foreigners Regional Registration அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் இக்ரா. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இக்ரா ஜிவானி மீண்டும் பாகிஸ்தான் நாட்டுக்கே திருப்பி அனுப்பபட்டதாக பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு (தன் மனைவி இக்ரா ஜிவானிக்கு) சட்ட விரோதமாக ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததற்கும், முறையான அனுமதி ஏதும் இல்லாத ஒரு வெளிநாட்டவரை தன் இருப்பிடத்தில் தங்க வைத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முலாயாம் சிங் யாதவ்.
முலாயாம் சிங் யாதவ்வின் தாய், தன் மருமகள் (இக்ரா ஜிவாணி) திரும்ப இந்தியா வர இருநாட்டு அரசாங்கங்களும் அனுமதிக்க வேண்டுமெனவும், அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தங்கள் வீட்டுப் பிள்ளை காதலித்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை, எனவே முலாயாம் சிங்கையும் விடுவிக்குமாறு அவரது சகோதரர் ஜீத்லால் கூறியுள்ளார்.
ஆனால் இக்ரா ஜிவானி குடும்பத்தினர் தரப்பிலோ, தங்கள் வீட்டு மகள் தங்களிடம் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாகவும், மேற்கொண்டு இந்தத் திருமண சம்பவம் குறித்து தங்களிடம் எதையும் கேட்க வேண்டாம் என பிடிஐ செய்தி முகமையிடம் சமீபத்தில் கூறியுள்ளனர்.
இருநாட்டு அரசாங்கங்களும் மனது வைத்தால் இந்த காதல் ஜோடி மீண்டும் சேர்ந்து வாழலாம்.
“அந்த ஜோடிய சேத்து வெச்சிடுங்க சார்".
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust