
பாகிஸ்தான் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வந்து கொண்டிருக்கின்றன. தற்போது அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதால், சர்வதேச பன்னாட்டு நிதியிடம் உதவிக்காக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவனி கையிருப்பு தரை தட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த நான்கு வார காலத்திற்கு இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டாலர் மட்டுமே பாகிஸ்தான் கையிருப்பில் இருக்கிறது. ஆனால் மறுபக்கம் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடன்களுக்கு வட்டி கொடுப்பதற்கே மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது.
கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களாக பாகிஸ்தானுக்கு வந்து அந்நாட்டு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச பன்னாட்டு நிதியத்தைச் சேர்ந்தவர்கள், வியாழக்கிழமை புறப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2023 ஜனவரி மாதத்தில் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் வருடாந்திர பணவீக்கம் 27 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த 1975ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் காணாத உச்சபட்ச பண வீக்கம்.
அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு கடந்த ஆண்டு 175 ரூபாயாக இருந்தது, தற்போது வரலாறு காணாத அளவுக்கு 275 ரூபாயாக தரை தட்டி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவினால் எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்து வாங்குவதற்கும், அதற்கான பேமென்ட் கொடுப்பதற்கும் மிக அதிக அளவில் பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் கையில் போதுமான அளவுக்கு வெளிநாட்டு கரன்சிகள் இல்லாததால், பாகிஸ்தான் பொருளாதாரத்திலேயே பல்வேறு தொழில்துறைகள் முடங்கியுள்ளன. உதாரணமாக அந்நாட்டின் ஜவுளித்துறை எடுத்துக் கொண்டால், பல்வேறு ஜவுளி நிறுவனங்களும் மின்சார தடையை எதிர்கொள்வது போலவே, டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜவுளித்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் ஆடைகளில் பயன்படுத்தும் சாயங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். இப்போதும் சீனாவுக்கு ஆர்டர்களை எல்லாம் கொடுத்த பிறகு சரக்கு ஏன் வந்து சேரவில்லை என்று கேட்டால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து டாலர் பேமெண்ட்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்படவில்லை என சீன தரப்பு கூறுகிறார்களாம்.
அதோடு ஜவுளித்துறை உற்பத்தியாளர்களால் தங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் சாதனங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. எனவே ஜவுளித்துறை சார்ந்த உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதோடு ஜவுளித் துறையில் வேலை செய்யும் பல்வேறு ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொழிலாளர்கள் கையில் பணப்புழக்கம் இல்லாதது, பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்துக்கு மற்றொரு பெரிய அடி.
பல்வேறு உலக நாடுகள் போல பாகிஸ்தானும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொருளாதாரங்களில் பல சிக்கல்களை எதிர்கொண்டது. போர் பிரச்சனையால் எரிபொருட்களின் விலை விண்ணைத் தொட்டன. இப்போதும் பாகிஸ்தான் நாட்டுக்குத் தேவையான எரிபொருட்களில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல பாகிஸ்தான் நாட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்களின் கணிசமான பகுதியும் இறக்குமதி வழியாகவே பூர்த்தி செய்யப்படுகின்றன.
பொதுவாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு சரியும் போது, அந்த நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால், மறைமுகமாக அது உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது பெரிய அளவில் போக்குவரத்து செய்யப்படும் பொருட்களை பாதிக்கும். சமீபத்தில் தான் பாகிஸ்தான் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை சுமார் 13 சதவீதம் வரை அதிகரித்தது. இனி அதிகரிக்கப் போவதில்லை என்றும் கூறியது நினைவுகூறத்தக்கது.
இத்தனை பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறித்து விட்டது என்றால் அது மிகை இல்லை. இந்த வெள்ளத்தினால் பாகிஸ்தான் நாட்டுக்கு சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் தரப்பில் கூறப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின, குறிப்பாக பாகிஸ்தானின் விவசாய நிலங்கள் மூழ்கியது அந்நாட்டின் உணவு உற்பத்தியை நேரடியாக பாதித்துவிட்டது. பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மிக அடிப்படையாக தேவையான கோதுமை, வெங்காயம் போன்ற பொருட்களின் விலை விண்ணைத் தொட்டன. இதற்கிடையில் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை வேறு, ஏரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பாகிஸ்தானில் தேர்தலும் நடத்தப்பட வேண்டி இருக்கிறது.
எப்போதெல்லாம் பாகிஸ்தான் நாட்டிற்கு பெரிய பொருளாதாரப் பிரச்சனைகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பாகிஸ்தான் அரசு, சர்வதேச பன்னாட்டு நிதியிடம் சென்று பல்வேறு கடுமையான சீர்திருத்தங்களை அமல்படுத்துவதாகச் சொல்லி கடனை வாங்கிக் கொண்டு வரும்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் வந்துவிடும், சர்வதேச பன்னாட்டு நிதியத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து விடும். அப்படி தேர்தல் காலத்தில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தும் சொல் மானியங்கள்.
சர்வதேச பன்னாட்டு நிதியம் மானியங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் மக்களோ அரசாங்க மானியத்தை அதிக அளவில் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டினால், தங்கள் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடியவில்லை என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதாக கூறினார். அப்படி அவர் கூறிய போது, பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரத்தில் பணவீக்கம் உயர்ந்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாட்டு ரூபாயின் மதிப்பு சரிந்தது.
கடைசியில் இம்ரான் காணும் 6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிக்காக சர்வதேச பன்னாட்டு நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தற்போது உடனடியாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் தவணையைப் பெற பாகிஸ்தான் சர்வதேச பன்னாட்டு நிதியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த தவணை கடந்த 2022 நவம்பர் காலகட்டத்திலேயே பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்படாததால் இப்போது வரை பேச்சுவார்த்தை நீண்டு கொண்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார சூழல் மிக மிக மோசமான நிலையில் இருப்பதால், சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் விதிகளை, பாகிஸ்தான், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது.
கடந்த மாதம் ஒரு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், பாகிஸ்தானும் இலங்கையின் பாதையில் பயணிப்பதாகக் கூறினார் இம்ரான் கான். கடந்த ஆண்டு இலங்கை அரசால் ஒரு கட்டத்தில் மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் வெகுண்டு எழுந்து ஆட்சியில் இருந்த அதிபரை பதவியில் இருந்து இறக்கினர்.
ஆனால் பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படாது என இஸ்லாமாபாத்தில் உள்ள The Sustainable Development Policy Institute-ல் செயல் இயக்குநராக இருக்கும் முனைவர் சஜித் அமின் ஜாவித் பிபிசி வலைதளத்திடம் கூறியுள்ளார்.
முதல் விஷயம் பாகிஸ்தான் பொருளாதாரத்தின் அளவு. பாகிஸ்தானுக்கு எப்போதுமே சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நட்பு நாடுகள் பலமுறை உதவிக்கரம் நீட்டி உள்ளன. பலமுறை பாகிஸ்தானுக்கு இந்த நாடுகள் கடன் மறுசுழற்சி வசதிகள், ஒரு கடனை சரி கட்ட மற்றொரு கடனை கொடுப்பது, நட்பு ரீதியிலான டெபாசிட்டுகள், கச்சா எண்ணெய் பேமெண்ட்டுகளை தாமதமாக செலுத்த அனுமதிப்பது போன்ற பல உதவிகளைச் செய்துள்ளனர்.
இருப்பினும் பாகிஸ்தானுக்கும் சில பிரச்சனைகள் இருப்பதாக ஜாவித் கூறுகிறார். இலங்கையிலும் சரி பாகிஸ்தானிலும் சரி அரசியல் நிலையற்றத் தன்மை என்கிற ஒரு பொதுவான விஷயம் நிலவுவயதை அவர் மறுக்கவில்லை. அதேபோல இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி வெளியேற வேண்டும், அதை எப்படி திறம்பட வழி நடத்தி வெளியே கொண்டு வர வேண்டும் என்பதும் மிக மிக முக்கியமான விஷயம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும், இம்ரான் கானின் பி டி ஐ கட்சியும் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இரு தரப்பினரும் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு நாட்டில் பொருளாதார நிலைத்தன்மை வேண்டுமானால், அதே அளவுக்கு வலுவான அரசியல் நிலைத்தன்மையும் அவசியம். துரதிஷ்டவசமாக இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் நிலைத்தன்மை அத்தனை எளிதாக வந்து விடாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டின் கையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாதது, வர்த்தக பற்றாக்குறை, இறக்குமதி செய்ய முடியாத சூழல் போன்ற சிக்கலான பொருளாதார வார்த்தைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சிம்பலாக பார்த்தால், பாகிஸ்தானுக்கு அமெரிக்க டாலர் வேண்டும். அதுவும் விரைவாக உடனடியாக வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் நாட்டில் குறைந்தபட்சமாக மின்விளக்குகளையாவது உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.
பாகிஸ்தானில் கோடைகாலம் வரவிருக்கிறது. கோடைகாலம் வந்துவிட்டால் மக்கள் அதிகப்படியாக மின்சாரத்தை பயன்படுத்த தொடங்குவர். இது பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மீது மீண்டும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது பாகிஸ்தான் பொருளாதாரத்தின் முன்னிருக்கும் மற்றொரு மிக முக்கிய கேள்வி என்னவென்றால்… சர்வதேச பன்னாட்டு நிதியிடம் இருந்து பணம் வந்து விட்டால், பாகிஸ்தான் நாட்டிற்கு தன்னுடைய பொருளாதாரத்தை சீரமைத்துக் கொள்ள எவ்வளவு கால அவகாசம் கிடைக்கும்?
ஐ எம் எஃப் அமைப்பிடமிருந்து நிதி உதவி கிடைத்துவிட்டால், அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் உதவத் தயாராக இருக்கின்றன. எனவே சர்வதேச பன்னாட்டு நிதியிடம் இருந்து பணம் வந்தால் பெரிய அளவில் பாகிஸ்தான் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என குர்ரம் ஹுசைன் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த வணிக & பொருளாதார பத்திரிகையாளர் பிபிசி வலைதளத்திடம் கூறியுள்ளார். பாகிஸ்தான் விரைவில் தன் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் என நம்புவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust