
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே சந்தை... போன்ற பல முழக்கங்களை நிறையக் கேட்க முடிகிறது. அதன் அடுத்த கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் வரை நடத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசிய அளவிலான பதிவேடு ஒன்றைக் கொண்டு வரும் வகையில் "ஒரே நாடு, ஒரே உறுப்பு தானப் பதிவேடு" திட்டத்தை இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை உருவாக்கி வகுத்து வருகிறது.
விபத்துக்கள் மூலமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து, அவர்களுடைய உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது தொடர்பாக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்கென கொண்டு வரப்பட்ட, 2014ஆம் ஆண்டின் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று விதிமுறைகளில் ( Transplantation of Human Organs and Tissues Rules) சில திருத்தங்களைக் கொண்டு வரும்படியும் என நீதிமன்றம் கூறியது.
ஆகையால்தான், இந்திய ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் "ஒரே நாடு, ஒரே உறுப்பு தான பதிவேட்டை" உருவாக்குவது தொடர்பாக மாநில அரசாங்கங்களோடு ஆலோசித்து வருகிறது. இதன் கீழ், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் மனிதர்களின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற பதிவுசெய்வதற்கு, ஒரே மாதிரியான விதிமுறைகள் உருவாக்கப்படும்.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, இது தொடர்பான கூட்டம் ஒன்று எல்லா மாநிலங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய உறுப்பு மாற்று சிகிச்சை விதிமுறைகளில் சில திருத்தங்களைச் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஒரே நாடு ஒரே உறுப்பு தானப் பதிவேட்டைப் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன அல்லது விரைவில் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு இது சிக்கலை உண்டாக்கும் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1. உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்காக பதிவுசெய்யும் நோயாளிகளின் வயது 65க்குள் இருக்க வேண்டும் என்கிற விதி நீக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் எப்போதுமே இந்த விதி கிடையாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 60 வயதுக்குக் கீழே உள்ள நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு அடுத்தகட்ட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
2. தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற பல மாநிலங்கள் உறுப்பு தானத்திற்காக பதிவு செய்யும்போது, நோயாளிகளிடமிருந்து சில ஆயிரங்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. அப்படி வசூலிக்கப்படும் கட்டணங்களை நீக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு எப்போதுமே பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
3. இறந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெற விரும்புபவர்கள், அந்த மாநிலத்தில் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் இருப்பவரும், இந்தியாவின் எந்த மருத்துவமனையில் இருந்தும் உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த புள்ளியில் தான் தமிழ்நாடு ஒரே நாடு ஒரே உறுப்பு தானப் பதிவேட்டுடன் முரண்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, உறுப்பு மாற்று சிகிச்சைக்கு நோயாளிகள் நேரடியாக பதிவுசெய்ய முடியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்தான் அதனைச் செய்ய முடியும்.
உறுப்பு தானம் வேண்டி ஒரு நோயாளி சார்பில் ஒரு மருத்துவர் பதிவுசெய்கிறார் என்றால், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவர் அந்த நோயாளியை நேரடியாகப் பரிசோதித்து, அவருக்கு உண்மையிலேயே உறுப்பு மாற்றம் தேவை தானா? என்பதை உறுதி செய்த பிறகே பதிவுசெய்வார். இதில் எதாவது பிரச்னை எழுந்தால், அதற்கு அந்த மருத்துவரும் மருத்துவமனையும்தான் பொறுப்பு என்கிறார்கள் விஷயமறிந்த மருத்துவர்கள்.
மேலும், நோயாளி தரப்பில் நேரடியாகப் பதிவுசெய்ய அனுமதித்துவிட்டால், எல்லோரும் தங்கள் இஷ்டத்துக்கு பதிவுசெய்துவிடுவர். தேவையற்ற பதிவுகளால், உண்மையிலேயே ஒரு நல்ல உறுப்பு தானம் கிடைக்கும் போது, அது வீணாவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, முதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறதா. அதன் பிறகே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கடைசியாகவே வெளிநாட்டு நோயாளிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக பிபிசி தமிழ் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் பல தசாப்த காலமாக கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு காரணமாக, தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பலரும் முன்வருகின்றனர். இந்தியாவிலேயே அதிகளவில் உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் ஒன்று.
இப்படிப்பட்ட சூழலில், ஒன்றிய அரசு கொண்டு வரும், ஒரே நாடு ஒரே உறுப்பு தானப் பதிவேட்டை தமிழகம் ஏற்றுக் கொண்டால், தமிழகத்தில் கிடைக்கும் உறுப்பு தானங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போதிய அளவுக்கு உறுப்பு தானம் கிடைக்காமல் அல்லல்படும் சூழல் எழலாம் என்றும் சில மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே பல மாநிலங்கள் யோசிப்பதற்கு முன், ஒன்றிய அரசு ஒரு விஷயத்தைச் செயல்படுத்துவதற்கு முன் தமிழ்நாடு பல விஷயங்களுக்கு விதைப் போட்டிருக்கிறது. அப்படி, தமிழ்நாட்டில் உறுப்பு மாற்றுத் திட்டம் 2008ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்டுவிட்டது. அப்போது, மூளைச் சாவு குறித்து முடிவுசெய்வது தொடர்பாக மாநில அரசிடம் சட்டங்கள் ஏதும் இல்லை.
1994ஆம் ஆண்டின் ஒன்றிய அரசு சட்டம் மட்டுமே கைவசம் இருந்தது. அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, உறுப்பு மாற்று சிகிச்சைக்கென புதிதாக அரசாணைகளைப் பிறப்பித்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் துவங்கப்பட்டது.
உலகின் ஆகச் சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் Transplant Authority of Tamilnadu என்ற அமைப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கட்டுப்படுத்துகிறது. 1994ல் Transplantation of Human Organs Act என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றிய பிறகு, இறந்தவர் உடலில் இருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1995ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டது.
2008ஆம் ஆண்டில் இதற்கான விரிவான கொள்கைகளோடு, இறந்தோர் உடலில் இருந்து உறுப்புகளைத் தானமாக பெறும் திட்டம் துவக்கப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்த 2015ல் Transplant Authority of Tamil Nadu உருவாக்கப்பட்டது என என பிபிசி தமிழ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்றை சட்டரீதியாக செய்ய முடியும் என இந்தியாவுக்கு சொன்னதே தமிழ்நாடுதான் என்றால் அது மிகையல்ல. திட்டம் துவங்கிய சில ஆண்டுகளிலேயே இறந்தவர்களிடமிருந்து உறுப்புகளை தானமாகப் பெற்று சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துவிட்டது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014ஆம் ஆண்டில்தான் தேசிய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான விதிகளை வகுக்க National Organ and Tissue Transplant Organization (NOTTO) கொண்டு வரப்பட்டது.
2015ஆம் ஆண்டில், NOTTO குறித்து ஒன்றிய அரசு தரப்பு, தமிழகத்தோடு விவாதித்தனர். அப்போது, தமிழக அரசின் புதிய விதிகள் குறித்த சிக்கல்களை தெரிவித்த போது, முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் செயல்படுத்துவோம் என்றனர். 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இந்த NOTTO விதிமுறைகளை ஏற்கவில்லை. ஒன்றிய அரசின் அதீதமான அழுத்தம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் NOTTO-வை தமிழகம் ஏற்றுக் கொண்டதாக பிபிசி தமிழ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், தமிழ்நாடு அரசு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென ஒரு தனி சட்டத்தை இயற்ற வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பதிவை மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், இதற்கென தனி உறுப்பு மாற்று சிகிச்சைக்கென சட்டங்களை இயற்றிவிட்டதால் அவர்களுக்கு NOTTO விதி பொருந்தாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust